0 1 min 1 week

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு:2.5

மனிதனை படைத்தது முதல் அவனோடு பேசி பழக வேண்டும் என்று தேவன் விரும்புவதாக வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆதி மனிதனாகிய ஆதாம், அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த அறியாமை இன்று வரை பலரிடமும் தொடர்கிறது.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த மிகப்பெரிய பிளவை நீக்கவே, இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவர் வருகையில் ஏற்பட்ட மாற்றங்களில், இதுவும் ஒன்று. தேவனையும் மனிதனையும் இணைக்க, தம்மையே பலியாகவும் அளித்தார்.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இயேசுவை தவிர, வேறு யாரும் மத்தியஸ்தராக மாற முடியாது. ஆனால் இன்று இரட்சிக்கப்பட்ட பலரும், தேவனுக்கான நேரத்தை ஒதுக்க விரும்பாமல், தேவ ஊழியர்களை மத்தியஸ்தராக வைத்து கொள்ள விரும்புகிறார்கள்.

ஏதாவது தேவை என்றால், தேவ ஊழியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பது, ஜெபிக்க சொல்வது, தீர்க்கத்தரிசனம் கேட்பது ஆகியவை இதில் அடங்கும். இன்னும் சிலர் குறிப்பிட்ட ஊழியர்களை மட்டுமே வைத்து கொண்டு, அவர்களிடம் கேட்டால் தான் சரியாக இருக்கும் என்றும் நினைக்கிறார்கள்.

மோசே உடன் பாலைவனத்தில் இருந்த இஸ்ரவேல் மக்களுக்கும் இதே பிரச்சனை தான் இருந்தது. தேவன் எங்களோடு பேச வேண்டாம். நீர் கேட்டு சொல்லும் என்று மோசேயிடம் இஸ்ரவேல் மக்கள் கூறினார்கள். இதனால் தேவனும் அப்படியே செய்தார்.

மோசே மரித்த பிறகு, அந்த பணியை யோசுவா செய்தார். அதன்பிறகு, என்ன முடிவு எடுப்பது, தாங்கள் செய்வது சரியா, தவறா என்று தெரியாமல் இஸ்ரவேல் மக்கள் திணறினார்கள். நியாயாதிபதிகள் இருந்த போது தேவனிடம் திரும்பினார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஆகாப் போன்ற மோசமான ராஜாக்கள் வந்த போது, தேவனை விட்டு முழுமையாக விலகினார்கள். எல்லா காரியங்களையும் தேவனிடம் விசாரித்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரவேல் மக்களுக்கு ஏற்படவில்லை. இதனால் பல ஜாதிகளிடம் அடிமைகளாக போனார்கள்.

எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் என்று ஊழியர்களிடம் கூறிவிட்டு, நமக்கும் தேவனுக்கு எந்த உறவும் இல்லாமல் இருந்தால், ஒரு கட்டத்தில் நாம் நம்பியிருக்கும் ஊழியர் இறந்தாலோ அல்லது விழுந்து போனாலோ, நம் நிலையும் இஸ்ரவேல் மக்களை போன்றதாகிவிடும்.

தேவ ஊழியர்களை கணப்படுத்தலாம், அவர்களுக்கு மதிப்பு அளிக்கலாம். ஆனால், அவர்கள் மூலம் மட்டுமே நான் தேவனுடைய ஆலோசனையை பெறுவேன் என்று இருக்கக்கூடாது. இன்னும் சிலர் தேவ ஊழியர்களை, தேவனுக்கு நிகராக வைத்திருப்பவர்களும் உண்டு. இது முற்றிலும் ஒரு தவறான முறையாக ஆகும்.

ஜெபத்தில் தினமும் தேவனோடு பேசும் அனுபவத்தை வளர்த்து கொண்டால், நாம் தடுமாறும் போது, அவர் நம்மை உணர்த்துவார். தாவீதின் வாழ்க்கையில் இந்த அனுபவத்தை காணலாம்.

தீர்க்கத்தரிசி சாமுவேலுக்கு தேவையான மரியாதையை தாவீது கொடுத்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் சாமுவேலை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தனக்கு இக்கட்டான நேரத்தில், தேவனிடம் அவரே ஆலோசனை கேட்பதை காண முடிகிறது.

எனவே, நமக்கு மத்தியஸ்தராக உள்ள இயேசுவை பற்றிக் கொள்வோம். அவரோடு ஜெபத்தில் தினமும் பேசுவோம். அப்போது அவரும் நமக்கு தேவையான ஆலோசனைகளை தந்து நடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, நீர் எங்களோடு பேச விரும்பும் நிலையில், தினமும் அதற்கு நேரத்தை ஒதுக்கி தேவ சமூகத்தில் காத்திருக்க உதவி செய்யும். உம்மோடு ஒரு தனிப்பட்ட உறவை பாதுகாத்து கொள்ள கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *