0 1 min 4 weeks

இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். 1 ராஜாக்கள்:19.9

இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தரே உண்மையான தேவன் என்பதை கண்கூடாக நிரூபித்து காட்டியதோடு, அவர்களை தேவனிடத்திற்கு திருப்பிய தீர்க்கத்தரிசி தான் எலியா. மேலும் இஸ்ரவேல் மக்களை கெடுக்கும் பாகாலின் தீர்க்கத்தரிசிகள் எல்லோரையும் கொன்று போட்டவர்.

இப்படி பல வகையிலும் தேவனுக்காக வைராக்கியமாக செயல்பட்ட தீர்க்கத்தரிசி என்றாலும், அவரிடம் எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் தேவனுடைய திட்டத்தில் இருந்து அவர் விலகி போயிருந்தார்.

எலியா தேவனுடைய திட்டத்தில் இருந்து விலகிப் போக என்ன காரணம் என்பதை நமது தியான வசனத்திற்கு முந்தைய வசனத்தை படித்தாலே தெரிந்துவிடும். ராணி யேசபேல் விடுத்த மிரட்டலுக்கு பயந்த எலியா, சூரைச் செடியின் கீழே மரணத்தை எதிர்பார்த்து படுத்து உறங்குகிறார்.

ஆனால் இந்த செயலை தேவன் விரும்பவில்லை. அதனால் தூதனை அனுப்பி உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கொடுக்கிறார். மீண்டும் படுத்து உறங்கும் எலியாவுக்கு 2வது முறை உணவு கொடுக்கும் போதே, நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தேவ தூதன், எலியாவிடம் கூறுகிறார்.

அதற்கு எலியா எதுவும் பதில் சொல்லவில்லை. குறிப்பாக, எங்கு எதற்கு போக வேண்டும் என்றும் கேட்கவில்லை. அவராக ஓரேப் மலை வரை சென்று, அங்குள்ள கெபியில் தங்கிவிட்டார். ஆனால் தேவனுடைய திட்டம் வேறாக இருந்தது.

இதனால் தான் எலியாவே, உனக்கு இங்கு என்ன வேலை என்று தேவன் கேட்கிறார். இன்று நம் வாழ்க்கையிலும், தேவ சித்தத்தை அறியாமல் நாமாக சென்று ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மனதை போட்டு குழப்பி கொள்கிறோம்.

இன்னும் சிலர் எலியாவை போல, அதோடு தங்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அது நம் வாழ்க்கையின் முடிவு அல்ல. பல வல்லமையான காரியங்களின் துவக்கமாக தேவன் முன் நியமித்துள்ளார்.

எனவே எந்த காரியத்தை செய்தாலும் தேவனுடைய முழுமையான ஆலோசனையை பெற்று செயல்படுவோம். நம் சொந்த இஷ்டத்தில் செயல்படுவது என்றுமே தோல்வியை மட்டுமே தரும். மேலும் எலியாவை போல எந்த பயனும் இல்லாமல், ஓடிய நம்மை தேவன் கேள்வி கேட்கும் நிலையும் ஏற்படும்.

எலியாவின் இந்த நடவடிக்கையின் மூலம் நாம் தவறான பாதையில் சென்றாலும், தேவன் நம் மூலம் செய்ய நினைத்த காரியங்களை, செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையில் வரும் சில கஷ்டங்களைக் கண்டு, நாங்களாக முடிவுகளை எடுக்காமல், உமது சித்தத்தை அறிந்து செயல்பட உதவி செய்யும். உம் சித்தம் செய்து, உமது நாமத்தின் மகிமைக்காக வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *