
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக் கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர்:3.3
நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு பல நன்மைகளை தேவன் நம் வாழ்க்கையில் அளித்தார், இன்றும் அளித்துக் கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் துன்பங்கள், கஷ்டங்கள் வழியாக நாம் கடந்து செல்லும் போது, மனம் தளர்ந்து போனவர்களாகி, எனக்கு ஏன் இந்த பாடுகளை அனுமதித்தீர் என்று தேவனிடமே கேள்விக் கேட்கிறோம்.
இந்த நேரத்தில், நம்மோடு வாழும் இரட்சிக்கப்படாத மக்களின் வளர்ச்சியோடு, நம் நிலையை ஒப்பிட்டு பார்க்கிறோம். அவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், அவனுக்கு எந்த குறையும் இல்லை. நானோ தினமும் தேவ சமூகத்தில் ஜெபத்தில் காத்திருந்தும் எனக்கு இத்தனை பிரச்சனை வருகிறது? என்று புலம்புகிறோம். ஏனெனில் மேற்கண்ட கஷ்டமான நேரங்களில், தேவன் நம்மை கைவிட்டது போன்ற எண்ணம் நமக்குள் உண்டாகிறது.
ஆனால் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளராக இருக்கிறார். இந்த உலகில் உள்ள எல்லாரும் நம்மை கைவிட்டாலும், தேவன் கைவிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, யோசேப்பின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம்.
எந்த தவறும் செய்யாத யோசேப்பு, சிறைத் தண்டனையை பெற்றான். அந்த சூழ்நிலையில், அவனை நேசித்த தகப்பன், தாய், சகோதர்கள் என்று யாரும் இருக்கவில்லை. ஆதியாகமம்:39.21-ல் வாசிக்கும் போது, “கர்த்தரோ யோசேப்போடு இருந்தார்”என்று காண்கிறோம்.
தந்தை யாக்கோபு உடன் தன் வீட்டில் சுகமாக இருந்த நாட்களில் யோசேப்பு, தேவனை கைவிடவில்லை. யோசேப்பின் கஷ்டமான நேரங்களில் தேவனால் கைவிடப்படவும் இல்லை. இதனால் பிற்காலத்தில் எகிப்தின் பெரிய அதிகாரியாக யோசேப்பு மாறினான்.
யோசேப்பை மட்டுமல்ல, அவருக்கு பிறகு எகிப்தில் இருந்து வெளியேறிய இஸ்ரவேலின் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை, எந்த நம்பிக்கையும் இல்லாத வனாந்தரத்தில் நடத்தியவர் நம் தேவன்.
இன்றைய கடினமான வாழ்க்கை சூழ்நிலையில் மனம் சோர்ந்து, தனிமையில் யோசேப்பை போல சிறையில் இருப்பதை போல உணரலாம். எல்லாராலும் கைவிடப்பட்டதாக தெரியலாம். ஆனால் தேவன், நம்மோடு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். பாலைவனம் போல நமக்கு தெரிந்தாலும், எந்த வெயிலும் குளிரும் நம்மை தாக்காமல் தேவன் பாதுகாப்பார்.
யோசேப்பிற்கு உண்மையுள்ளவராக இருந்த கர்த்தர், நம்மை நடத்தவும் வல்லமையுள்ளராக இருக்கிறார். எனவே விசுவாசத்தில் சோர்ந்து போக வேண்டிய அவசியமே இல்லை.
ஜெபம்:
எங்களின் நேசிக்கும் அன்பான தேவனே, எங்களை அழைத்தது முதல் இதுவரை வழிநடத்தி வரும் உமது கிருபைகளை எண்ணி நன்றியுள்ள இதயத்தோடு உம்மை துதிக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் வரும் எந்த மாதிரியான பிரச்சனைகளிலும், நீர் எங்களை கைவிடுகிற தேவன் அல்ல என்று பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். உம்மை விசுவாசித்து அனுதினமும் வாழ கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.