0 1 min 7 mths

… அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?… 2 ராஜாக்கள்: 5.26

இந்த உலகில் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், பிரச்சனைகளில் இருந்து விடுதலைப் பெற வேண்டுமானால் தேவ சமூகத்திற்கு வர வேண்டியுள்ளது. தேவனை அறியாமல் வாழும் பலரும், இரட்சிப்பிற்கு வருவது கூட இப்படித்தான்.

இந்த முறையில் தேவனின் வல்லமையுள்ள தீர்க்கத்தரிசியாக பிரகாசித்த எலிசாவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்த நாகமான், தனது குஷ்டரோகத்தில் இருந்து பூர்ண சுகம் பெற்றான். இதேபோல நாம் செய்யும் சில தேவ ஊழியங்களின் மூலம் அநேகருக்கு உள்ள தீராத நோய்கள், பிசாசின் கட்டுகள் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கலாம்.

இதனால் அவர்களுக்கு ஏற்படும் பெரியளவிலான ஆறுதலைத் தொடர்ந்து, பல பரிசுப் பொருட்களை நமக்கு அளிக்கிறார்கள். இதில் சிலவற்றை நம் மனதில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டோம். இதேபோல குஷ்டம் நீங்கி சுகமடைந்த நாகமானும், தான் கொண்டு வந்திருந்த அநேக பரிசுப் பொருட்களை எலிசாவிற்கு அளிக்க முற்படுகிறான். அவற்றை காணிக்கை என்று கூறி, வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறான்.

ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என்று தேவன் மீது ஆணையிட்டு தடுக்கும் எலிசா, அவற்றை அப்படியே திருப்பி அனுப்பி விடுகிறார். அவற்றை ஏன் திருப்பி அனுப்பினார் என்பதையும் கூறவில்லை. ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசிக்கு, தனது எஜமானுக்கு தெரியாமல் அந்தப் பரிசுப் பொருட்களில் சிலவற்றை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் அடைகிறான். ஆனால் அந்தக் காரியத்திற்காக, எலிசாவின் பெயரை எந்த அனுமதியும் இல்லாமல் கேயாசி பயன்படுத்தி விடுகிறான்.

மேற்கூறியது போல, சில நேரங்களில் நம்மால் செய்யப்பட்ட தேவ ஊழியங்களுக்கு பிரதிபலனாக அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று தேவன் தடுக்கலாம். அதற்கான காரணத்தையும் அவர் கூறாமல் இருக்கலாம். அந்தத் தடைகளையும் மீறிச் சென்று, பணத்திற்காகவும் பொருட்களுக்காகவும் தேவனுடைய நாமத்தை நாம் வீணாக வழங்கக் கூடாது.

எடுத்துக்காட்டாக, இவ்வளவு பெரிய ஊழியத்தை செய்ய என்னை தேவன் பயன்படுத்தினார். இதன்மூலம் இத்தனைப் பேர் சுகமடைந்தார்கள், விடுதலைப் பெற்றார்கள் பாருங்கள் என்று கூறி, காணிக்கைகளைத் திரட்ட கூடாது. அப்படி திரட்டி கிடைக்கும் எதுவும், நம் வாழ்க்கையில் ஆசீர்வாதமாக அமையாது.

நாகமான் அளிக்க விரும்பிய பொருட்களைக் கண்டு மயங்கிய கேயாசி, வல்லமையான தேவ ஊழியரின் வேலைக்காரன் என்ற தனது மேன்மையான பதவியை மறந்தான். நாகமானிடம் சென்றதோ, அவனிடம் இருந்து பரிசுப் பொருட்களைப் பெற்றதையோ, யாரும் அறியவில்லை என்ற நம்பிக்கையில் கேயாசி செயல்பட்டான்.

ஏனெனில் தீர்க்கத்தரிசி எலிசாவோடு வாழ்ந்த போதும், அவருக்குள் இருக்கும் தேவ வல்லமையைக் குறித்து கேயாசிக்கு தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

தீர்க்கத்தரிசியுடன் இருந்தால் பெரும், புகழும் அடையலாம் என்ற எண்ணத்தில் கேயாசி இருந்திருக்கலாம். இதனால் அதற்கான வாய்ப்பு கிடைத்த போது, அதை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் தேவ சித்தம் அல்ல என்று தனது குருவால் தள்ளப்பட்ட ஒரு காரியம், எந்த வகையிலும் தனக்கு ஆசீர்வாதமாக இருக்காது என்பதை கேயாசி சிந்திக்க தவறிவிட்டான்.

இது போன்ற தவறை நம் வாழ்க்கையில் செய்யாமல், விழிப்புடன் செயல்படுவோம். நமக்கு தேவையான ஆசீர்வாதங்களை அளிப்பதற்கு தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

அதை மறந்து, தேவ ஊழியங்களையும் அவருடைய நாமத்தையும், முன்நிறுத்தி காட்டி பணத்தையும் பொருட்களையும் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது என்றும் நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வராது. நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கே சாபத்தைப் பெற்று தருவதாக அமையும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, பலருடைய வாழ்க்கையில் பெரிய விடுதலையையும் சமாதானத்தையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய பாத்திரங்களாக எங்களை வைத்துள்ள உமது தயவுக்காக ஸ்தோத்திரம். அதே நேரத்தில் நாங்கள் விரும்பும் சில ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ள உமக்கு விருப்பமில்லை என்றால், அவற்றை விட்டுவிட உதவி செய்யும். கேயாசியைப் போன்ற மறைவான முயற்சிகளில் ஈடுபட்டு சாபங்களுக்கு பாத்திரவான்களாக மாறாமல் எங்களை பாதுகாத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *