0 1 min 11 mths

ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி வீழ்த்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது. அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். 2 ராஜாக்கள்:6.5

எலிசாவுடன் வசித்து வந்த தீர்க்கத்தரிசிகளின் புத்திரர் நெருக்கடியான பகுதியில் இருப்பதைத் தொடர்ந்து அதை விரிவுப்படுத்த நினைக்கிறார்கள். எலிசாவின் அனுமதியுடன் யோர்தானை ஒட்டிய பகுதியில் இருந்த மரங்களை வெட்டி, அங்கே கூடாரம் அமைக்க திட்டமிடுகிறார்கள்.

நம் வாழ்க்கையிலும் பல காரியங்களிலும் நெருக்கங்களைச் சந்தித்து வருகிறோம். தேவாலயத்தில், வியாபாரத்தில் அல்லது பணிபுரியும் அலுவலகத்தில் நெருக்கம் அனுபவித்து வரலாம். சிலர் விசாலமான வீடுகளில் வசித்து வந்தாலும், மனதில் அதிக நெருக்கத்தைத் தாங்கிக் கொண்டிருக்கலாம்.

அவற்றில் இருந்து ஒரு விடுதலை அல்லது விசாலமான இடத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், அதற்காக ஜெபிக்கிறோம். தேவனும் அதை தடைச் செய்வதில்லை. ஏனெனில் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் அவர் பதில் அளிக்கிறவராக இருக்கிறார்.

இந்நிலையில் தீர்க்கத்தரிசன புத்திரர் மரங்களை வெட்ட சென்ற போது, தீர்க்கத்தரிசி எலிசாவையும் உடன் அழைத்து சென்றதாக வேதம் கூறுகிறது. அதேபோல நமது விரிவாக்கத்திற்காக ஜெபித்து விட்டு, நம் விருப்பத்திற்கு பணிகளைச் செய்ய துவங்காமல், நம் இரட்சகர் இயேசு நம்மோடு இருக்கிறாரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும், தேவாலயங்களிலும் இன்று பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதன் பின்னணியில் சுயசித்தம் தான் நிற்கிறது. தாங்களாக ஏதாவது ஒரு காரியத்தைத் தீர்மானித்துக் கொண்டு, அதை ஏற்கும் சிலரைக் கூட சேர்த்து பணிகளைத் துவங்குகிறார்கள். ஆனால் அது தேவ சித்தமா? என்று யோசிப்பது கூடக் கிடையாது.

இதனால் பல சபைகளிலும், குடும்பங்களிலும் தேவையில்லாத பிரிவினைகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. அதன்பிறகு தேவனைக் குற்றப்படுத்துகிறார்கள். ஆண்டவரே, நாங்கள் உமது நாமத்திற்காக இவ்வளவு செய்தும், அது தோல்வியில் முடிந்ததே…? என்று கதறுகிறார்கள்.

எலிசாவை உடன் அழைத்து சென்ற போதும், மரம் வெட்ட சென்ற ஒருவரது கோடரி, ஆற்று நீரில் விழுந்தது. அதேபோல தேவ ஆலோசனையின்படி செய்யும் போதும் சில பிரச்சனைகள் எழும்பலாம். ஆனால் அதை நாம் அவரிடம் கூறும் போது, அதற்கான தீர்வு கிடைக்கிறது.

தீர்க்கத்தரிசனப் புத்திரரோடு எலிசா இருந்ததால், நீரில் மூழ்கிய இரும்பை எடுக்க, வெட்டி போடப்பட்ட மரக்கிளை காந்தமாக செயல்படுகிறது. இது மனித மூளைக்கு அப்பாற்பட்ட விஷயம் ஆகும். இதேபோல தேவனிடத்தில் இருந்து வரும் ஆலோசனையின்படி நாம் செய்யும் போது, ஏற்படும் பிரச்சனைகளின் தீர்வு, நமது அறிவுக்கு எட்டாத ஒன்றாக அமையும்.

மற்றொரு வகையில் சிந்தித்தால், அந்த கோடாரி இரவலாக வாங்கப்பட்டதாக, மரம் வெட்டியவர் கூறுகிறார். அதேபோல நமது ஆவியைத் தேவன் இரவலாக தந்துள்ளார் என்பதை நாம் மறக்க கூடாது. அதை இந்த உலகம் என்னும் ஆற்றுநீரில் தவறி விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில், தேவன் தந்த ஆவியை (பரிசுத்தாவியின் வல்லமையை), உலக காரியங்களில் ஈடுபடும் போது, இழந்து விடுகிறோம். அதன்பிறகு நமது அன்றாட காரியங்களில், சுயமாக செயல்பட முடியாமல் திணறுகிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், நம்முடைய குறைகளை அறிக்கையிட்டு, தேவனுடைய ஆலோசனையைப் பெற்று, நாம் தவறவிட்ட இடத்தைத் தேவனிடம் கூற வேண்டும். அப்போது நாம் இழந்த ஆவிக்குரிய அனுபவங்களைத் தேவன் திரும்ப தருகிறார்.

எனவே எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், தேவ சித்தத்தை அறிந்து செயல்படுவோம். மேலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். பிரச்சனையின் மத்தியில் பதறுவதை விட்டுவிட்டு, நாம் ஆவிக்குரியத் தோல்வியைச் சந்தித்த இடத்தைக் கண்டறிந்து, தேவனிடம் அறிக்கையிடுவோம். அப்போது நாம் நினைப்பதைக் காட்டிலும், பெரியக் காரியங்களைத் தேவன் நமக்காக செய்வார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும், உமது சித்தத்தை அறிந்து செய்ய உதவி செய்யும். எங்களுக்கு நேரும் ஆவிக்குரிய தோல்விகளில் சோர்ந்து போகாமல், அதில் இருந்து மீண்டும் புதுப்பித்து கொள்ள கிருபைத் தாரும். உமது உன்னதமான ஆலோசனைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *