
அதற்கு அவன்: இதோ நாலு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவில் உலாவுகிறதைக் காண்கிறேன்;… என்றான். தானியேல்:3.25
தானியேலின் நண்பர்களாக அறியப்பட்ட சாராத், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்தனர். அதற்கான விளக்கத்தை ராஜாவிற்கு தெளிவுப்படுத்தி, தேவன் மீதான வைராக்கியத்தை காட்டுகின்றனர் (தானியேல்:3.16-18).
அக்கினி சூளையின் அளவு ஏழு மடங்கு அதிகரித்த போதும், மேற்கண்ட மூன்று பேரின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிகிற அக்கினி சூளையில் போடப்பட்டனர்.
நம் வாழ்க்கையில் கூட பல சந்தர்ப்பங்களில் அக்கினி சூளையை போன்ற சோதனைகளை நாம் சந்திக்கிறோம். ஆனால் அவற்றில் தேவனுடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் காண முடிகிறதா? என்று கேட்டால், பலரும் இல்லை என்றே கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் என்னவென்றால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களிடம் இருந்த தேவன் மீதான தீவிர விசுவாசமும், தேவ நாமத்திற்கான வைராக்கியமும், நம்மிடம் இல்லை என்பதே.
நமது வாழ்க்கையில் வரும் சோதனைகளின் நடுவில், சூழ்நிலைக்கு ஏற்ப நாம் ஒத்துப் போகிறோமா? அல்லது தேவ மகிமைக்காக உறுதியான தீர்மானங்களை எடுக்கிறோமா? என்பதை பொறுத்தே, தேவனுடைய அதிசய கிரியையின் அளவு அமைகிறது.
மேற்கண்ட மூன்று பேரின் உறுதியான தீர்மானத்திற்கு பிறகும், அந்த அக்கினி சூளை சோதனையில் இருந்து, தேவன் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் அந்த சோதனையின் நடுவில் தேவன் அதிசயத்தை செய்வதை காணலாம். இதேபோல சில சோதனைகளின் நடுவில் நாம் உலா வர வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆனால் அக்கினி சூளையின் தீவிரத்தில் அவர்களை அதற்குள் போட போனவர்கள் பலியானார்களே தவிர, அவர்களுக்கு எந்த சேதமும் உண்டாகவில்லை. இதேபோல நம்மை அந்த சோதனைக்குள் வீழ்த்திய பலரும் பாதிக்கப்படுவார்களே தவிர, நாம் பாதிக்கப்படமாட்டோம்.
மேலும் அவர்களின் கட்டுகள், அக்கினியில் எரிந்து போயின. அவர்கள் மூன்று பேரும் விடுதலை பெற்றவர்களாக உலா வந்தனர். இதேபோல நம் சோதனைகளின் நடுவிலும், பெரிய ஒரு சமாதானத்தோடு உலா வர முடியும்.
மேற்கண்ட காரியங்களை மட்டுமே அந்த மூன்று பேரும் காண முடிந்தது. ஆனால் அவர்களை அக்கினியில் போட உத்தரவிட்ட ராஜாவிற்கு, நான்காவது நபர் ஒருவர் உலா வருவது தெரிந்தது. அதுவும் தேவ புத்திரனுடைய சாயலை அவர் பெற்றிருந்தார்.
இதுபோல நாம் கடந்து செல்லும் சோதனைகளில் தேவனுக்காக வைராக்கியமாக நிற்கும் போது, தேவன் நம்மோடு இருப்பதை, ஒருவேளை நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால் நமக்கு எதிராக கிரியை செய்தவர்களுக்கு, அது தெள்ளத் தெளிவாக தெரியும்.
எனவே நம் வாழ்க்கையில் அக்கினி சூளை போன்ற சோதனைகளை கடக்க நேரிடும் போது, அதற்கு பயப்பட தேவையில்லை. தேவனுக்காக வைராக்கியமாக நிற்கும் போது, அந்த சோதனையின் அளவு அதிகரிக்கலாம்.
தேவன் சோதனையில் இருந்து நம்மை தப்புவிக்காமல், அதன் வழியாகவே நடத்தவும் கூடும். ஆனால் அது ஒரு அழிவிற்கான செயல் அல்ல. அது ஒரு தேவ நாமம் மகிமைப்படுவதற்கான செயல் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்புள்ள தேவனே, எங்களின் சோதனை நேரங்களில் மீட்கிறவராக, எங்களோடு நீர் உலா வருகிறீர் என்று பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அக்கினி போன்ற சோதனைகளிலும், தேவனுக்காக வைராக்கியமாக நின்று, உமது அதிசயங்களையும், அற்புதங்களையும் காணத்தக்கதாக உதவி செய்யும். அதன் மூலம் தேவ நாமத்தை மகிமைப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.